தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-01-04 18:37 GMT

தேங்கி நிற்கும் கழிவுநீர்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு ரோடு செல்லும் சாலையின் இடைப்பட்ட பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அகற்றப்படாத மாலைகள்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியலமைப்பு தலைவர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் அணிவித்த மாலைகள் அகற்றப்படாமல் காய்ந்த நிலையில் காணப்படுவதினால் அம்பேத்கரின் சிலைக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காய்ந்த நிலையில் காணப்படும் மாலைகளை அகற்றிவிட்டு அம்பேத்கரின் சிலையை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

உடைப்பு சரிசெய்யப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், குரும்பாபாளையம் கிராமத்தில் உள்ள புது ஏரியின் மடைப்பகுதியானது சமீபத்தில் பெய்த மழையில் உடைந்தது. அதில் பெரும்பாலான நீர் வெளியேறிவிட்டது. சரி செய்யப்படாமல் இப்படியே இருந்தால் வரும் மழைக்காலங்களில் மேலும் மண் அரிப்பு ஏற்பட்டு ஏரி கடுமையாக பாதிக்கக்கூடும். ஆகையால் சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நீராதாரத்தை காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் குரங்குகள் தொல்லை மிக அதிகமாக இருக்கிறது. நோயாளிகளிடம் இருக்கும் பொருட்களை எடுத்து செல்வது, நோயாளிகளைகான வருவோர் வாகனத்தில் உள்ள பொருட்களை சேதபட்டுதல் என பெரும் அட்டூழியம் செய்கின்றன. இதனால் இங்கு இருப்போர் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலை வசதி வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், காடூரில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியின் முக்கிய சாலை மிக மோசமான நிலையில் மண் பாதைபோல் காட்சி அளிக்கிறது. இதனால் மழை பெய்யும்போது சாலை சேறும், சகதியுமாக மாறுவதால் இந்த சாலையில் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்