தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-23 17:38 GMT

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வடக்கு காந்தி கிராமம் முத்து நகர் 3-வது வீதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மின் விளக்கு அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், குளித்தலை கிளை நூலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறையில் மின் விளக்கு அமைக்கபடவில்லை. இதனால் வாசகர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, வயலூர் மாரியம்மன் கோவில் அருகே மின் கம்பம் அமைக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமட்டத்தின்போது இந்த மின் கம்பம் கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் புனிதமேரி மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை தாண்டி செல்லும் நிலை உள்ளது. இதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பூட்டப்பட்ட நூலகம்

கரூர் மாவட்டம், மரவாபாளையத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் உள்ளாட்சித்துறை சார்பில் அப்பகுதி வாசகர்களின் நலன் கருதி நூலகம் கட்டப்பட்டு பல்வேறு வகையான நூல்கள் வைக்கப்பட்டது. தினசரி நாளிதழ்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த வாசகர்கள் தினசரி வந்து நாளிதழ்கள் மற்றும் பல்வேறு நூல்களை படித்து பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நூலகம் திறந்து வைக்கப்படாமல் பூட்டப்பட்டு இருக்கிறது. இதனால் வாசகர்கள் நாளிதழ் மற்றும் பல்வேறு நூல்களை படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மரவா பாளையத்தில் பூட்டப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைத்து நூலகர்களுக்கு உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் முதல் நொய்யல் வரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டது. இந்த தார் சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், பல்வேறு வகையான லாரிகள், கார்கள், வேன்கள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்