தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-23 17:24 GMT

பள்ளி மாணவ-மாணவிகள் அவதி

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வாணதிரையான் பட்டணம் பஞ்சாயத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் சுற்று பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் பணியில் இல்லாததால் பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு என முறையாக கழிவறை வசதி இல்லாததால் அவர்கள் பெரிதும் அதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விபத்தில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள்

அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலை வழியாக அரியலூரில் இயங்கி வரும் சிமெண்டு ஆலைகளுக்கு தினமும் எண்ணற்ற சுண்ணாம்புக்கல் லாரிகள், சிமெண்டு லாரிகள், கல்லூரி, பள்ளி வேன்கள், பஸ்கள் சென்று வருகிறது. இந்நிலையில் மேற்படி சாலையில் பெரும்பாலான இடங்களில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த பள்ளங்களை கடந்த ஆண்டு சீரமைத்தனர். அதாவது பழைய சாலையின் அளவிற்கு பள்ளத்தை சரி செய்யாமல் சற்று உயரத்தை அதிகப்படுத்தி சீரமைத்தனர். இதனால் எதிரில் அசூர வேகத்தில் வரும் கனரக வாகனங்களுக்கு வழி விடும்போது பஞ்சர் ஒட்டப்பட்ட தார் சாலையின் உயரத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர் . இதனால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படும் சூழல் வி.கைகாட்டி வரை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

அரியலூரில் இருந்து ஓரியூர் செல்லும் டவுன் பஸ்கள் இரவு நேரத்தில் குறைந்த அளவு இயக்கப்படுவதால் பஸ்களில் கூட்ட நெரிசல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பட்டுப்போன மரம்

அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் செல்லும் சாலையோரத்தில் உள்ள மரம் ஒன்று பட்டுபோய் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சன்னதி தெரு பகுதியில் சுமார் 6 தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள வங்கிகளில் பணம் செலுத்துவதற்கும், எடுப்பதற்கும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். அவர்களிடம் அடிக்கடி திருட்டு நடைபெற்று வருகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கழிவுநீர் வாய்க்கால் வேண்டும்

அரியலூர் மருத்துவமனை சாலை, முருகன் வால்பட்டறை பின்புறம் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கழிவுநீர் வடிகால் வசதி இல்லாத்தால் தாழ்வான பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்