தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-30 18:37 GMT

தெருநாய்கள் தொல்லை

அரியலூர் மாவட்டம், பளுவூர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைத்தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கட்டிடக்கழிவுகளை அகற்ற கோரிக்கை

அரியலூர் மேலத்தெருவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் அகற்றப்படாமல் அப்படியே கொட்டப்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்து நெரிசல்

அரியலூர் மாவட்டம், மின்நகர் பகுதியில் அரியலூர்-கள்ளங்குறிச்சி செல்லும் சாலை ஓரத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதினால், இந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் இப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விபத்துகளை ஏற்படுத்தும் கனரக வாகனங்கள்

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வி.கைகாட்டி, விளாங்குடி கிராமங்கள். இந்த கிராமங்கள் கயர்லாபாத் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். தேளூர் மின்வாரிய அலுவலகத்திற்கு கிழக்கு பகுதியில் அதிகளவில் ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகள் உள்ளன. வெளி மாவட்டத்திலிருந்து வி.கைகாட்டியிலுள்ள சிமெண்டு ஆலைக்கு தினமும் நெய்வேலியில் இருந்து அதிகளவில் நிலக்கரி ஏற்றி வரும் லாரிகளும், சிமெண்டு மூட்டைகள், ஜல்லிக்கற்கள் ஏற்றி வரும் லாரிகளும் 24 மணி நேரமும் விளாங்குடிமேடு பகுதியில் உள்ள பேக்கரி, ஓட்டல்கள் முன்பாக போக்குவரத்திற்கு இடையூறாக கனரக வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்று விடுகிறார்கள். இரவு நேரங்களில் லாரிகளில் சிகப்பு நிற இண்டிகேட்டர் போடுவதில்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி பல்வேறு விபத்துகள் நடக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலை வசதி வேண்டும்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட வேலாயுதம் 2-வது தெருவில் கடந்த 15 ஆண்டுகளாக மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கொண்டிருக்கிறது. சரிவர சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்