தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-28 18:15 GMT

தெரு நாய்களால் தொல்லை

அரியலூர் மாவட்டம், விழுப்பணங்குறிச்சி, அம்பாபூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுகாதார சீர்கேடு

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி பகுதிமுழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும் காணப்படுவதினால் அதில் அதிக அளவில் மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. குறிப்பாக தினமும் பொதுமக்கள் அதிகம் செல்லும் பகுதியான ஜெயங்கொண்டம் செல்லும் பஸ் நிறுத்த பகுதியில் அதிகளவில் குப்பைகள் தேங்கியும், சேறும் சகதியுடன் குட்டைகளில் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதி முழுவதும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாய்க்கால் பாலம் அமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கருடகம்ப தெருவில் சித்தேரி என்னும் ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்பி வாய்க்காலில் செல்லும் தண்ணீரை கொண்டு இப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது மழை அதிகமாக பெய்து வருவதால் இந்த வாய்க்காலை தாண்டிச் செல்லும் போது சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் ஆடு மற்றும் மாடுகள் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த வாய்க்காலில் பாலம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த ரேஷன் கடை கட்டிடம்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், நல்லநாயகபுரம் கிராமத்தில் இயங்கி வந்த ரேஷன் கடை கட்டிடம் சிதிலமடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது பயனற்ற நிலையில் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் தற்போது தனிநபர் வீட்டில் இயங்கி வருகிறது. எனவே பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டிடத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் தனியார் சிமெண்டு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்டு ஆலைக்கு தினமும் வெளிமாவட்டங்களில் இருந்து எண்ணற்ற சிமெண்டு மூட்டைகள் மற்றும் நிலக்கரி, சுண்ணாம்புக்கல் ஏற்றி வரும் கனரக லாரிகளை முத்துவாஞ்சேரி செல்லும் முதன்மை சாலையில் இருபுறமும் நிறுத்தி விடுவதால் அடிக்கடி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் செல்லும் 108 ஆம்புலன்ஸ்களும் பலமுறை நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் நின்று விடுகிறது. இதோடு இல்லாமல் வி.கைகாட்டி புற காவல் நிலையம் முதல் தனியார் சிமெண்டு ஆலையின் மெயின் கேட் வரை எப்போதுமே புழுதி படலமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்