தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் இன்றி மக்கள் அவதி
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, நமங்குணம் கிராமம் 1-வது வார்டில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிற்றரசன், நமங்குணம், அரியலூர்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் உஞ்சினி அம்பேத்கர் நகரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றிவிட்டு, இப்பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், செந்துறை
சரிசெய்யப்படாத உயர்கோபுர விளக்கு
அரியலூர் அருகே உள்ள பள்ளேரி ஏரி கரையில் அமைந்துள்ள உயர் கோபுர விளக்கு கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இது அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் பிரதான வழியாக உள்ளதால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து உள்ளதால் பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்
நோய் பரவும் அபாயம்
அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி நெருஞ்சிக்கோரை கிராமத்தில் கிழக்கு தெரு, வடக்கு தெரு, நடுத்தெரு பகுதிகளில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நெருஞ்சிக்கோரை.
நிழற்குடை அமைக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் காகங்கவடங்க நல்லூர் பிரிவு சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காட்டுக்கொல்லை