தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ரோவர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உதவி கல்வி அலுவலர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகச் சாலையில் இருந்த மழைநீர் வடிகால் வாய்க்கால் ஏறத்தாழ 200 மீட்டர் நீளத்திற்கு தனிநபர்களால் கிராவல் மண்ணை கொண்டு மூடி நிரவல் செய்யப்பட்டதால், மழைநீர் வடிகால் தூர்மண்டி போய் உள்ளது. இதனால் இப்பகுதியில் கட்டிடங்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் மழைநீர் துறைமங்கலம் ஏரியை சென்றடைவது தடைபட்டு வருகிறது. பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மழை நீர் வடிகால்வாய்க்காலை தூர்வாரி மழைநீர் வடிந்து செல்ல உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வெங்கடேசபுரம்.
எரியாத தெரு விளக்குகள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கூத்தூர் மேலத்தெருவில் உள்ள அரசு பள்ளி முதல் அரசு பெண்கள் விடுதி வரை அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல்லை. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் பெண்கள், சிறுவர். சிறுமிகள் உள்பட பொதுமக்கள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆகாஷ், கூத்தூர்.
ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூரை அடுத்துள்ள தெற்கு மாதவி கிராமத்தில் உள்ள மருதை ஆற்றில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் அசுத்தம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சிறுகன்பூர்.
சிக்னலை இயக்க கோரிக்கை
பெரம்பலூர் ரோவர் வளைவு நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியாகும். இதனால் அந்தப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். ஆனால் அங்குள்ள போக்குவரத்து சிக்னல் இயக்கப்படுவதில்லை. இதனால் அங்கு ஒரே நேரத்தில் நான்கு சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் சில சமயத்தில் விபத்துக்குள்ளாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் ரோவர் வளைவில் சிக்னல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.