தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-29 19:06 GMT

மூடப்படாத கழிவுநீர் வாய்க்கால்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்குள் அம்மா உணவகத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு உள்ளே கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம் செய்து விட்டு, சுமார் 4 மாதங்களாக கழிவுநீர் வாய்க்கால்கள் மூடப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

முட்புதர்களால் மறைக்கப்பட்ட பாதை

பெரம்பலூர் நகரின் மையப்பகுதியில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் ஸ்ரீவெள்ளந்தாங்கி அம்மன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் ஆயக்கட்டு பகுதியில் உள்ள தங்களது வயலுக்கு விவசாயிகள் நடந்து செல்லும், வண்டி மாடுகள் செல்லும் ஏரிக்கரை பாதை முட்புதர்களால் மூடிமறைக்கப்பட்டுள்ளது. இதனால் வயல்வெளிக்கு செல்லும் விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவருவதற்கு சிரமப்படுகின்றனர். ஆகவே மாவட்ட கலெக்டர், விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

கால்வாய் வசதி வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சி சிவாஜி தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் போதிய அளவில் கால்வாய் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் மழைபெய்யும்போது மழைநீருடன் கழிவுநீர் கலந்து தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அய்யம்பெருமாள், அரும்பாவூர்.

புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காமராஜர் வளைவு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்கள், ஆம்புலன்சுகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

வீணாகும் தண்ணீர்

பெரம்பலூர் ஸ்ரீவெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரையில் முனீஸ்வரர் கோவில் அருகே அமைந்துள்ள 2-வது மதகு பகுதி ஷட்டர்கள் இன்றி உள்ளது. இதனால் ஏரியில் உள்ள தண்ணீர் எந்த நேரமும் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் மழைபெய்யும்போது, இந்த ஏரியில் மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இப்பகுதியில் வெயில் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் ஷட்டர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

Tags:    

மேலும் செய்திகள்