தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-22 19:09 GMT

கோழி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

திருச்சி மாவட்டம், குழுமணி பகுதியில் உள்ள சில்லரை கோழி கடைகள் மூலமாக கோழி கறிகள் விற்பனை செய்யப்பட்டு, அவற்றின் கழிவுகளை குழுமணி ஊராட்சிக்கு உட்பட்ட கோப்பு- எட்டரை சாலையின் ஓரத்தில் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமல்லாது, கோழி கழிவுகள் கொட்டபடுகின்ற சாலை, மிக புகழ் பெற்ற வயலூர் முருகன் கோவில் செல்லும் மிக முக்கியமான சாலையாகும். இந்த குழுமணி சாலை வழியாக வயலூர் மட்டுமல்லாது, சோமரசம்பேட்டை வழியாக திருச்சி பகுதியை இணைக்கும் மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் தினமும் நூற்றுகணக்கானவர்கள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதினால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குழுமணி.

சேறும், சகதியுமான சாலை

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், பூலாங்குடி காலனி பகுதியில் சாலை வசதி இல்லாததால் மண் சாலையாக காணப்படுகிறது. இதனால் நேற்று பெய்த மழையின் காரணமாக இப்பகுதியில் உள்ள மண் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி இருசக்கர வாகன ஓட்டிகள், முதியோர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சகாயராஜ், பள்ளிவாசல் தெரு.

சிதிலமடைந்த சிமெண்டு சாலை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்பைஞ்சீலி வடக்கு தெருவில் உள்ள குஞ்சுபிள்ளை நகருக்கு செல்லும் மண் சாலைக்கு பதிலாக சில மாதங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்த சிமெண்டு சாலை ஆங்காங்கே பெயர்ந்து கற்கள் வெளியே தெரியும் அளவுக்கு உள்ளது. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். தரமற்ற முறையில் போடப்பட்ட இந்த சாலையை மீண்டும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருப்பைஞ்சீலி.

கள்ளத்தனமாக மது விற்பனை

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள எதுமலையில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகிலேயே அரசு உயர்நிலைப்பள்ளி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, மாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் இப்பகுதியில் வாரச்சந்தையும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் என்று பலதரப்பட்ட மக்களும் அதிக அளவில் சென்று வருகின்றனர். இந்நிலையில், அதிகாலை நேரம் மற்றும் இரவு 10 மணிக்கு மேலும் அதிக விலைக்கு கள்ளத்தனமாக மது விற்கப்படுகிறது. இதன் காரணமாக எப்போது சென்றாலும் மது கிடைக்கும் என்ற எண்ணத்தில் மது பிரியர்கள் அங்கே வந்து மது வாங்கி குடித்து விட்டு தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டு செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், எதுமலை.

ஆபத்தான துணை சுகாதார நிலைய கட்டிடம்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கிழக்குன்னுப்பட்டியில் உள்ள அரசு துணை சுகாதார நிலைய கட்டிடம் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கார்த்திக், கிழக்குன்னுப்பட்டி. 

Tags:    

மேலும் செய்திகள்