தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-09 18:16 GMT

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையில் குட்ட கடையிலிருந்து ஆலம்பாளையம் செல்லும் தார்சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்த தார்சாலை சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்களும், லாரிகள், கார்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆலம்பாளையம்.

பனை மரத்தை பிடுங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

கரூர் மாவட்டம், ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில் புன்னம்சத்திரம் அருகே வி.ஜி.பி. நகர் எதிரே சாலை ஓரத்தில் இருந்த பனைமரத்தை மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பிடுங்கி சாலை ஓரத்தில் போட்டுள்ளனர். தமிழக அரசு பனைமரங்களை பாதுகாக்கும் வகையில் பனை மரங்களை வெட்டவோ, பிடுங்கவோ கூடாது என உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு பனைமரத்தை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தது. இந்நிலையில் சாலை ஓரத்தில் இருந்த பனைமரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் பிடுங்கி சாலை ஓரத்தில் போடப்பட்டு கிடப்பதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புன்னம்சத்திரம். 

Tags:    

மேலும் செய்திகள்