தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-07 18:01 GMT

குறுகிய பாலத்தால் மக்கள் அவதி

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முனிநாதபுரத்தில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இருசக்கர வாகனத்தில் சென்றுவரும் வகையில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக விவசாயிகள் தங்களது விவசாய தோட்டத்திற்கு இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். அதேபோல் பொதுமக்கள் அங்குள்ள பிரசித்தி பெற்ற முனியப்பசாமி கோவிலுக்கும் காவிரி ஆற்றிற்கும் சென்று வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் தங்களது விவசாயத் தோட்ட பயிர்களுக்கு இடுவதற்கான இடுபொருட்களை நான்கு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்ல முடியாமலும், விளைந்த விளைபொருட்களை எடுத்து வர முடியாமலும் தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அசோகன், முனிநாதபுரம், கரூர்.

காவிரி ஆற்றை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்கள்

கரூர் மாவட்டம், திருக்காடுதுறை அருகே கட்டிப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்குள் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சீமைக்கருவேல மரத்தில் உள்ள காய்கள் கீழே விழுவதால் அந்த காய்களை கால்நடைகள் உண்ணுகின்றன. அவ்வாறு தொடர்ந்து சீமைக்கருவேல மர காய்களை கால்நடைகள் உண்ணுவதால் கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் மேட்டூர் அணையிலிருந்து அதிக தண்ணீர் திறந்து விட்டால் சீமைக்கருவேல மரங்கள் ஏராளமாக முளைத்திருப்பதால் தண்ணீர் தேங்கி ஊருக்குள் வெள்ள நீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கார்த்தி, கட்டிபாளையம், கரூர். 

Tags:    

மேலும் செய்திகள்