தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் தட்டுப்பாடு
திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டியில் உள்ள அடைக்கல அன்னை நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் சரியாக வருவதில்லை. இப்பகுதி மக்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து தங்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அடைக்கல அன்னை நகர் பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அடைக்கல அன்னை நகர்.
தார்சாலை வேண்டும்
திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர் ஊராட்சி, முருங்கப்பேட்டை கிராமம், சீனிவாச நகர் மற்றும் காவேரி கார்டன் காருண்யா நகர் வழியாக முருங்கப்பேட்டை பஸ் நிறுத்தம் மற்றும் வெள்ளாந்தெரு பஸ் நிறுத்தம் ஆகிய இரண்டையும் இணைக்கும் சுமார் 2.5 கிலோ மீட்டர் சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மெட்டல் சாலையாக போடப்பட்டது. இந்த சாலை தற்போது சிதிலமடைந்து கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதனை தார் சாலையாக மாற்றி அமைத்துதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகள், முருங்கப்பேட்டை.
சிதிலமடைந்த மின்கம்பங்கள்
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு 2 மின்கம்பங்கள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அதன் அடிப்பகுதி சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பங்கள் முறிந்து சாலையில் விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தியானேசுவர், ஸ்ரீரங்கம்.
இருக்கை இன்றி தவிக்கும் ரெயில் பயணிகள்
திருச்சி ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான ரெயில்கள் வந்து செல்கின்றன. இங்கு வரும் ரெயில்களில் ஏராளமான ரெயில் பயணிகள் ஏறி வெளியூருக்கு செல்கின்றனர். அப்போது இரவு நேரத்தில் ரெயில் பயணிகள் முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளில் ஏற முடியாத அளவிற்கு கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், இருக்கைகளிலும், உடைமைகளை வைக்கும் பகுதிகளிலும் படுத்து உறங்கிக் கொண்டு வருகின்றனர். அவர்களை எழுந்திருக்க கூறினாலும், அவர்கள் எழுந்திருக்க மறுக்கின்றனர். இதனால் பயணிகள் இருக்கைகள் இன்றி கால்கடுக்க நின்று பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது. இதனால் சிலர் ரெயில் பெட்டியின் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து முன்பதிவு இல்லாத பெட்டிகளில் உறங்கும் பயணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரியாஸ், திருச்சி.