பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி

தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி

Update: 2022-07-01 20:26 GMT

மோசமான சாலை

ஈரோடு மேல்திண்டலில் இருந்து வள்ளிபுரத்தான்பாளையம் செல்லும் சாலை மோசமாக உள்ளது. அங்கு வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை ஆகிய அலுவலகங்கள் உள்ளதால், விவசாயிகள் அதிகமாக அந்த வழியாக வந்து செல்கிறார்கள். மேலும், ரிங்ரோட்டுக்கு செல்லும் சாலையாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் இந்த சாலையை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். அங்கு ரோடுகள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

திவ்யா, ஈரோடு.

சாக்கடை வடிகால் வசதி 

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவில் பகுதியில் அண்ணா வீதி நாச்சம்மா குட்டையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. முறையான சாக்கடை வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீரானது அங்குள்ள சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அந்த பகுதியில் முறையான சாக்கடை வடிகால் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வெள்ளாங்கோவில்.

குப்பையை அள்ள வேண்டும்

ஈரோடு நசியனூர் செம்பாம்பாளையம் சாலையோரத்தில் பலர் குப்பைகள் மற்றும் அழுகிய பழங்களை கொட்டி சென்று விடுகிறார்கள். இதனால் காற்று அடிக்கும் போது குப்பைகள் பறந்து இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகிறது. மேலும் குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி அந்த பகுதியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நசியனூர்.

மரக்கிளையில் மின் கம்பி 

பர்கூர் அருகே உள்ள மலைக்கிராமம் தாமரைக்கரை. இந்த கிராமத்தில் இருந்து ஈரெட்டி, ஒந்தனை கிராமத்துக்கு மின் கம்பங்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. மின்சாரம் கொண்டு செல்லும் மின் கம்பிகளில் ஆங்காங்கே அந்த பகுதியில் உள்ள மரக்கிளைகள் குறுக்கிடுகின்றன. இதனால் மரக்கிளைகள் மின் கம்பியில் உரசி அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. எனவே மின் கம்பியில் உரசும் மரக்கிளைகளை அகற்ற மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தாமரைக்கரை.

வேகத்தடைகள் அமைக்கப்படுமா? 

ஈரோடு மாணிக்கம்பாளையம் பள்ளிக்கூட மைதானம் அருகே உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக வரும் வாகனங்கள் வளைவில் திரும்பும்போது விபத்து ஏற்படுகிறது. 3 சாலைகள் இணையும் பகுதியாக இது இருப்பதால் இதுபோன்று விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி விட்டது. எனவே இங்குள்ள ரோடுகளை சீரமைப்பதுடன், விபத்துகளை தடுக்கும் வகையில் 3 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் வேகத்தடையும் அமைக்க வேண்டும்.

பொதுமக்கள், மாணிக்கம்பாளையம்.

Tags:    

மேலும் செய்திகள்