விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம்திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழாஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-03-31 18:45 GMT

திரவுபதியம்மன் கோவில்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமைவாய்ந்ததுமான திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தீமிதி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

அதுபோல் இந்த ஆண்டு 473-ம் ஆண்டு தீமிதி விழா உற்சவம் கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அன்று முதல் 30-ந் தேதி வரை எருமணந்தாங்கல், பொய்யப்பாக்கம், மகராஜபுரம், கீழ்பெரும்பாக்கம், சாலையாம்பாளையம், நாப்பாளைய தெரு, காகுப்பம் உள்ளிட்ட 9 உபயதாரர்களால் உற்சவம் நடைபெற்றது.

தீமிதி விழா

இதனை தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தீமிதி விழா நடைபெற்றது. இதையொட்டி காலை முதல் திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணியளவில் தீமிதி விழா நடந்தது.

இதற்காக கோவில் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு நடந்த சிறப்பு தீபாராதனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கீழ்பெரும்பாக்கம் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்