நெல்லிக்குப்பத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா; திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

நெல்லிக்குப்பத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-06-03 18:45 GMT


நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பிரமோற்சவம் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த மாதம் 25-ந்தேதி முதல் உற்சவம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகா சூரனுக்கு அன்னமிடல் விழாவும் நடைபெற்றது.

விழாவில் நேற்று முன்தினம் மாலையில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாலையில், கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில், பக்தர்கள் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் சிலர் தங்களது குழந்தைகளை தூக்கிச்சென்றும், தீ மிதித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர், நகரவாசிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்