திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.;

Update:2022-07-19 14:05 IST

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை, தெற்குபட்டு ஆகிய இரண்டு கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில். பல ஆண்டுகளாக விமரிசையாக நடைபெற்று வந்த கோவிலின் வசந்த விழா இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் கூட்டம் இல்லாமல் நடைபெற்றது.

இந்த ஆண்டு கோவிலின் 14 நாட்கள் வசந்த விழா சிறப்பாக நடைபெற்றது. இறுதி நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் மஞ்சள் ஆடை உடுத்தி, விரதமிருந்த பக்தர்கள் 300 பேர் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் தெப்ப குளத்தில் நீராடிய பின் கரகம் ஏந்தி ஊர்வலமாக வந்த பக்தர்கள் திரவுபதி அம்மன் கோவில் முன்பு தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் ஒருங்கிணைந்து செய்து இருந்தனர்.

அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், மதூர் அருகே உள்ள காட்டுக்கரணை உமாபதிமாரியம்மன் கோவில் 30-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பிற்பகல் கூழ்வார்த்தலும் நடந்தது. மாலை விரதமிருந்த பக்தர்கள் காப்பு கட்டி கோவிலை வலம் வந்து அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.

பின்னர் தீமிதி குண்டத்திற்கு திருஷ்டிகள் கழித்தனர். பிறகு நெருப்பை கையால் அள்ளி அம்மன் மடியில் வைத்து உத்தரவு பெற்றனர். அதன் பின்னர் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்