தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
சீர்காழி அருகே தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
சீர்காழி:
சீர்காழி அருகே தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
தீமிதி திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் தர்மராஜா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 25-ந்தேதி கொடி ஏற்றப்பட்டு தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவ திருவிழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி காளியம்மன் கோவிலில் இருந்து திரளான பெண்கள் உள்பட 500- க்கும் மேற்பட்டோர் பால்குடம், அலகு காவடி எடுத்து வந்து தர்மராஜா மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேர்த்திகடன்
தொடர்ந்து மாலை கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.