பாலமுருகன் கோவிலில் தீமிதி திருவிழா
சங்கராபுரம் அருகே பாலமுருகன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே காட்டுவன்னஞ்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் சாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து கோவில் அருகே அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் பலர் அலகு குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் தேவபாண்டலம் குந்தவேல் முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பங்குனி உத்திரவிழாவையொட்டி தேர்திருவிழா நடைபெற்றது.