பழுதடைந்து காணப்படும் குடிநீர் தொட்டி

பந்தலூர் அருகே பழுதடைந்த குடிநீர் தொட்டி இடியும் நிலையில் உள்ளது. இதனை புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-08-19 14:02 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே பழுதடைந்த குடிநீர் தொட்டி இடியும் நிலையில் உள்ளது. இதனை புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குடிநீர் தொட்டி

பந்தலூர் அருகே அய்யன்கொல்லி, மூலைக்கடை சோதனைச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படாமல் இருந்தது. இதனால் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அய்யன்கொல்லி அருகே மூலைக்கடையில் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

கோட்டப்பாடியில் உள்ள கிணறுகளில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் குடிநீர் தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து சிறு குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு, பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட வில்லை. இதனால் தொட்டி பழுதடைந்து வெடிப்பு ஏற்பட்டு உள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதன் காரணமாக குடிநீர் கசிகிறது. மேலும் தொட்டி அமைக்கப்பட்ட 4 தூண்களும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் தொட்டி இடிந்து விழும் நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் பழுதான குடிநீர் தொட்டியை இடித்து விட்டு, புதிய தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

மூலைக்கடையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியின் அடிப்பகுதி பெயர்ந்து விழுந்து உள்ளதால், நாளுக்கு நாள் பலமிழந்து வருகிறது. தண்ணீர் தொடர்ந்து கசிவதால் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் அசம்பாவிதம் நிகழ வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, பழைய குடிநீர் தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிய தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்