தடுப்பணையை தூர்வாரும் பணி மும்முரம்

தேவர்சோலை அருகே வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதை தடுக்க தடுப்பனையை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-08-26 14:51 GMT

கூடலூர், 

தேவர்சோலை அருகே வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதை தடுக்க தடுப்பனையை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சேறு நிறைந்த தடுப்பணை

கூடலூர் தாலுகா பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பல மாதங்கள் பெய்வது வழக்கம். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வரை தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆற்று வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட நெல்லிக்குன்னு, பாலம் வயல், ஒற்ற வயல், குற்றிமுற்றி, புத்தூர்வயல் வழியாக மாயாருக்கு ஆறு செல்கிறது. கனமழை பெய்த சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனிடையே ஒற்றவயல் அருகே குண்டம்வயல் பகுதியில் பல ஆண்டுகளாக தடுப்பணை பராமரிப்பின்றி சேறும் சகதியுமாக புதர்கள் நிறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் சீராக செல்ல வழி இன்றி கரையோரம் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது.

தூர்வாரும் பணி

இதனால் தடுப்பணையை தூர்வார வேண்டும். மேலும் குண்டம் வயலில் இருந்து காரக்குன்னு வழியாக தேவர்சோலைக்கு செல்லும் நடைபாதையை புதுப்பிக்க வேண்டும். தொடர்ந்து கால்வாய் குறுக்கே உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் பேரூராட்சி 3-ம் வார்டு கவுன்சிலர் ரம்சீனா மற்றும் ஆதிவாசி மக்கள் மாவட்ட கலெக்டர் சா.ப.அம்ரித்தை சந்தித்து முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டம் வயல் தடுப்பணையை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்றது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்து வீடுகளுக்கு தண்ணீர் செல்லாதவாறு கால்வாய் ஆழப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தூர்வாரப்படாத தடுப்பணையால் தண்ணீர் செல்ல வழியில்லாமல், கனமழை பெய்யும் சமயத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து சிரமம் ஏற்பட்டு வந்தது.

தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்