பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

Update: 2023-05-13 18:45 GMT

திருவாரூர்- கூத்தாநல்லூா் தாலுகாவில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

30-ந்தேதிக்குள் முடிக்கப்படும்

தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க, தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை தூர்வாரும் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளை தூர்வாரும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள மேலமணலி கிராமத்தில் உள்ள பனையனார் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில பணிகளின் இடையே அடிக்கடி மழை பெய்ததால் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. மழை முடிந்து வெயில் அடிக்க தொடங்கிய உடனே மீண்டும் தூர்வாரும் பணிகளை தொடங்கினர். வருகிற 30-ந்தேதிக்குள் தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

அதன்படி நேற்று திருவாரூர் தாலுகா பகுதிகளுக்கு உட்பட்ட அம்மையப்பன் பகுதியில் விளமல் வாய்க்கால், ஊர்குடி தலைப்பு 18.வாய்க்கால், கமலாபுரம் பகுதியில் உள்ள கட்டையன் தெரு சித்தாறு வாய்க்கால், ஆமூர் பகுதியில் பாசனவாய்க்கால் ஆகிய பாசனவாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரடாச்சேரி ஒன்றியம் களத்தூர் பாண்டவையாறு தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருவதையும், கூத்தாநல்லூர் தாலுகா பெருமங்கலம் முசிறியம் தலைப்பு வாய்க்கால், திருமதிகுன்னம் வாய்க்கால் ஆகியவற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

அப்போது அந்த பகுதியில் இருந்த விவசாயிகளிடம் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது உதவிசெயற்பொறியாளர் சிதம்பரநாதன், செயற்பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்