கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து டி.ஐ.ஜி. ஆய்வு

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-11-26 16:52 GMT

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா நேரில் ஆய்வு செய்தார்.

கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை மற்றும் இரவில் சாமி வீதியுலா நடைபெற உள்ளது. 7-ம் நாள் விழாவன்று பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், 10 நாள் விழாவன்று அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

மகா தீபத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதை மற்றும் திருவண்ணாமலை நகர பகுதியில் மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோவில், கிரிவலப்பாதை, நகரம் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியின் மூலமும், கண்காணிப்பு கேமரா மூலமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

டி.ஐ.ஜி. ஆய்வு

மேலும் நேற்று கோவிலில் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மெட்டல் டிடெக்டர் மூலமும் கண்காணிக்கப்பட்டது. தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா நேரில் வந்து அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்