பேரிடர் மேலாண்மை குழு சீர்காழி வருகை

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பேரிடர் மேலாண்மை குழு சீர்காழி வந்துள்ளதாக தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி கூறினார்.

Update: 2022-11-12 19:15 GMT

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பேரிடர் மேலாண்மை குழு சீர்காழி வந்துள்ளதாக தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி கூறினார்.

பேரிடர் மேலாண்மை குழு

தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கயல்விழி நேற்று மாலை சீர்காழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 11-ந் தேதி பெய்த கன மழையின் காரணமாக சீர்காழி உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஆணைக்காரன் சத்திரம், திருவெண்காடு மற்றும் புதுப்பட்டினம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 3 சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1,050 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது. தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவின் பேரில் பேரிடர் பாதிப்பிலிருந்து பொதுமக்களுக்கு உதவ 40 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மை குழு வந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மயிலாடுதுறை மாவட்டத்தில் 120 காவலர்களை உள்ளடக்கிய பேரிடர் மேலாண்மை குழுவும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவல் தெரிவிக்கலாம்

மேலும் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழுவினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு உதவி வருகின்றனர். மழை காரணமாக சாலைகளில் மரங்கள் விழுந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கு மழை சம்பந்தமான ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மயிலாடுதுறை மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு நிஷா உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்