2 பேரை வெட்டிவிட்டு தப்பி ஓடியவர்களை பிடிக்க தனிப்படை பாணாவரம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்த டி.ஐ.ஜி.ஆனிவிஜயா தகவல்
பாணாவரம் அருகே ஜாமீனில் வந்தவர் உள்பட 2 பேரை வெவ்வேறு சம்பவங்களில் கத்தியால் வெட்டிவிட்டு ஓடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி.ஆனிவிஜயா தெரிவித்தார்.
காவேரிப்பாக்கம்,
பாணாவரம் அருகே ஜாமீனில் வந்தவர் உள்பட 2 பேரை வெவ்வேறு சம்பவங்களில் கத்தியால் வெட்டிவிட்டு ஓடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி.ஆனிவிஜயா தெரிவித்தார்.
முன்விரோதம்
பாணாவரத்தை அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் சரத்குமார் (வயது 23) மீது பாணாவரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக கைதான சரத்குமார் சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்தார்.
அவர் தினமும் பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட்டு வருகிறார். இவருக்கும் பாணாவரம் பகுதியை சேர்ந்த வண்டு என்ற ராஜேஷ் (25) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சரத்குமார் கூத்தம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்துள்ளார். அப்போது அங்கிருந்த வண்டு என்ற ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான ராணிப்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (31), கீழ்வீராணம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் உள்பட 4 பேர் சேர்ந்து சரத்குமாரை பட்டாக் கத்தியால் முதுகு, முகம், கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இதில் சரத்குமார் நிலைகுலைந்து கீழே சாய்ந்தார். உடனே 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
தகவல் அறிந்த பாணாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரத்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர் சம்பவம்
இதேபோல் கடத்த 18-ம் தேதி பாணாவரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த கிளின்டன் என்ற வினோத்குமாரை முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் கத்தியால் குத்திவிட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் முகம், முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடதக்கது.
அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் டி.ஜ.ஜி. ஆனி விஜயா பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு திடீரென வந்தார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், அரக்கோணம் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.
2 சம்பவங்களிலும் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இரவு ரோந்து அதிகரிப்பு
இது குறித்து டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறுகையில், ''போலீசார் தொடா்ந்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடுதல் போலீசார் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஓரிரு நாட்களில் நியமிக்கப்பட உள்ளனர்.
தப்பி ஓடி தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவாா்கள்'' என்றார்.