மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் சிக்கல்; பேச்சுவார்த்தைக்கு பின் தகனம்

உப்பிடமங்கலம் அருகே பாதை பிரச்சினையால் மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் மாற்றுப்பாதையில் எடுத்து சென்று தகனம் செய்யப்பட்டது.

Update: 2022-08-23 18:46 GMT

கோர்ட்டில் வழக்கு

உப்பிடமங்கலம் அருகே உள்ள ராசாக்கவுண்டனூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 85). இவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்.

இவரின் தோட்டத்திற்கு அருகே அதே பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் (70), அவரின் தம்பி காத்தவராயன் (65) ஆகியோரின் தோட்டம் உள்ளது. கோவிந்தசாமி மற்றும் கருப்பண்ணன், காத்தவராயன் ஆகியோருக்கு இடையே தோட்டத்திற்கு செல்லும் பொது பாதை சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு கோர்ட்டில் வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவிந்தசாமியின் மனைவி ராஜம்மாள் (75) வயது முதிர்வு காரணமாக இறந்தார். இதையடுத்து கோவிந்தசாமி மற்றும் அவரின் உறவினர்கள் அந்த பாதையின் வழியாக மூதாட்டியின் உடலை எடுத்து செல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதனை அறிந்த கருப்பண்ணன் மற்றும் காத்தவராயன் ஆகியோர் அந்த பாதையில் தடைகளை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த பாதையின் வழியாக தனது மனைவியின் உடலை எடுத்து செல்ல நடவடிக்கை எடுத்து தருமாறு வெள்ளியணை போலீசில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் தாசில்தார் சிவக்குமார், வெள்ளியணை வருவாய் ஆய்வாளர் ஜெயவேல், உப்பிடமங்கலம் கீழ்பாகம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரி, வெள்ளியணை சப்-இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பிரச்சினைக்குரிய பாதை வழியாக மூதாட்டியின் உடலை எடுத்து செல்லாமல் மாற்றுப்பாதையில் எடுத்து செல்வதாக கோவிந்தசாமி மற்றும் அவருடைய மகன்கள் ராதாகிருஷ்ணன், ஜெயராமன் ஆகியோர் ஒப்புக்கொண்டனர். அதன்படி மூதாட்டி ராஜம்மாவின் உடல் மாற்றுப்பாதையில் எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்