ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் மூழ்கி இறந்த 2 தொழிலாளர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் மூழ்கி இறந்த 2 தொழிலாளர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்:
2 பேர் பலி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கானம் கஸ்பா கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிலோன்காலனி ஆரைக்குளம் செல்லும் மங்கம்மாள் சாலை உள்ளது.
நேற்று முன்தினம் தோட்டத்தில் உள்ள கிணற்றில் மின்மோட்டார் பழுதானது. இதை பழுது நீக்குவதற்காக குலசேகரநல்லூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் அரியநாயகம் (வயது 60) வந்தார். அவர், கிணற்றை ஒட்டிய மோட்டார் அறையின் கீழ்தளத்தில் உள்ள மின்மோட்டாரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவருக்கு துணையாக தோட்ட தொழிலாளர்களான ஆரைக்குளத்தை சேர்ந்த ஈஸ்வரன் (45, கவர்னகிரியைச் சேர்ந்த மாரிமுத்து (50), சிந்தலக்கட்டையைச் சேர்ந்த மரியதாஸ் (75) ஆகியோர் சென்றார். அப்போது திடீரென்று மோட்டார் அறையின் கீழ்தளம் இடிந்து கிணற்றில் விழுந்தது. இதில் 4 பேரும் கிணற்று தண்ணீரில் விழுந்தது. அவர்கள் மீது கட்டிட இடிபாடுகளும் விழுந்தது. இந்த சம்பவத்தில் ஈஸ்வரன், மரியதாஸ் ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள். மற்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர். பலியான 2 பேரின் உடல்களும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
உறவினர்கள் போராட்டம்
இந்த நிலையில் பலியான 2 பேரின் உடல்களை வாங்க மறுத்து குடும்பத்தினர், உறவினர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அழகு தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஓட்டப்பிடராம் மெயின் பஜாரில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, போலீஸ் நிலையத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டன.
சமாதான கூட்டம்
பின்னர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், துணை சூப்பிரண்டுகள் சுரேஷ், வெங்கடேஷ், மண்டல துணை தாசில்தார்கள் மகாராஜன், திருமணி ஸ்டாலின், யூனியன் தலைவர், துணைத் தலைவர், இந்தியா கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அழகு, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் பங்கேற்றனர்.
நிவாரண நிதி
இறந்த 2 பேரின் குடும்பத்திற்கும் அரசு ேபரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும். தோட்ட உரிமையாளர் மீது 304 (ஏ) பிரிவில் விபத்து வழக்குப் பதியப்பட்டு உள்ளது. அவர் மூலமும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரின் உடல்களை பெற்றுக் கொள்வதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.