மத்தூர்:
மத்தூர் அருகே ஏரியில் மூழ்கி அக்காள், தம்பி பலியாகினர்.
பள்ளி விடுமுறை
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பள்ளத்தூர் முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி (35). இவர்களுக்கு அர்ச்சனா (14), புவனா (10) என்ற 2 மகள்களும், வினோத் (8) என்ற மகனும் உண்டு.
இதில் புவனா மத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பும், வினோத் அதே பள்ளியில் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை என்பதால் புவனா, வினோத் ஆகியோர் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள மாதவபுரம் ஏரிக்கு குளிக்க சென்றனர்.
அப்போது புவனா ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதைக் கண்ட வினோத் அக்காள் புவனாவை காப்பாற்றுவதற்காக தானும் ஆழமான பகுதிக்கு சென்றார். இதனால் வினோத்தும் தண்ணீரில் மூழ்கினான். இதில் அக்காள், தம்பி இருவரும் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
சோகம்
இதற்கிடையே வீட்டுக்கு திரும்பிய முருகன் தனது குழந்தைகள் ஏரி அருகே விளையாட சென்றதை அறிந்து பதற்றத்துடன் அங்கு சென்றார். அப்போது அங்கு ஏரியில் இறங்கி 2 பேரையும் தேடினார். இதையடுத்து இறந்த மகள், மகனின் உடல்களை தோளில் சுமந்து கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் இருவரின் உடல்களை பார்த்து அவரும், உறவினர்களும் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மத்தூர் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளித்தபோது அக்காள், தம்பி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.