காவேரிப்பட்டணம் அருகே ஆற்றில் மூழ்கி விவசாயி சாவு
காவேரிப்பட்டணம் அருகே ஆற்றில் மூழ்கி விவசாயி சாவு
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 55). விவசாயி. இவர் நேற்று காலை 11 மணியளவில் குடிபோதையில் காவேரிப்பட்டணம் ஆற்று பகுதிக்கு சென்றார். அங்கு அடுத்த கரை பகுதியான காவாப்பட்டி கரைக்கு செல்ல ஆற்றில் இறங்கியதாக தெரிகிறது.
அப்போது அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என கூறினார்களாம். அவர்களிடம் முனியப்பன் காவாப்பட்டி கரைப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு செல்வதாக கூறினாராம். பின்னர் ஆற்றில் இறங்கிய முனியப்பன் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வீரர்கள் ஆற்றில் இறங்கி முனியப்பனை தேடினர். பின்னர் திம்மாபுரம் ஆற்றுப்பகுதியில் முனியப்பனை இறந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதையடுத்து அவரது உடல் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.