ஆர்ப்பாட்டத்தின்போது போலீசார் விதிமீறலா?

ஆர்ப்பாட்டத்தின்போது போலீசார் விதிமீறல் நடந்ததா என தகவல்களை வழங்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Update: 2023-07-28 19:45 GMT

மதுரை

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அலாவுதீன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரத்தில் 2014-ம் ஆண்டில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டனர். இதுகுறித்து நீதி விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி., விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் ஐ.ஜி. விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் உள்ள சில தகவல்களை தெரிவிக்குமாறு தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் தர மறுத்து விட்டனர். இதை ரத்து செய்து, உரிய தகவல்களை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் மனித உரிமை மீறல் குறித்து கேட்ட தகவல்களை தர முடியாது என நேரடியாக உத்தரவிட முடியாது. அவர் ஊழல் குறித்த தகவல் கேட்டு இருந்தால், தகுதி அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம். மனித உரிமை குறித்ததாக இருந்தால் மனித உரிமை ஆணையத்திடம் அனுமதி பெற்று தகவல் அளிக்கலாம். இந்த நடைமுறையை 45 நாட்களில் முடித்து இருக்க வேண்டும். இந்த நடைமுறையானது, மனுதாரர் வழக்கில் பின்பற்றப்படவில்லை. எனவே மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தற்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் வெளியில் தெரிவிக்க முடியாத முக்கிய தகவல்களை அளிக்க வேண்டியதில்லை. பிற தகவல்களை வழங்கலாம். விதிமுறைகளின்படி, மனுதாரர் கேட்ட தகவல்களை வருகிற 2-ந்தேதிக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்