துணியில் கறை நீக்கிய சலவை தொழிலாளர்கள் வாழ்வில் கரையேறினார்களா?
துணியில் கறை நீக்கிய சலவை தொழிலாளர்கள் வாழ்வில் கரையேறினார்களா? என்பது குறித்து கருத்து தொிவிக்கப்பட்டுள்ளது.
முற்காலத்தில் நம் முன்னோர் அழுக்கு படிந்த துணிகளை மூட்டைகளாக கட்டிக்கொண்டு ஆற்றங்கரைக்கும், குளத்திற்கும், ஏரி கரைக்கும் சென்று துவைத்து வந்தனர்.
இதில் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் சலவை தொழிலாளிகளிடம் துணிகளை சலவைக்கு கொடுத்து வந்தனர்.
அழிந்து வரும் கைத்தொழில்
ஆனால் இன்றைய விஞ்ஞான உலகில் தொழில்நுட்பம் வளர வளர கைத்தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. செருப்பு தைக்கும் தொழில், கத்தி, அரிவாள், கத்திரிக்கோல் உள்ளிட்ட பொருட்களுக்கு வீதி வீதியாக வந்து சாணம் பிடிக்கும் தொழில் உள்ளிட்ட பல தொழில்கள், அதன் கடைசி பரம்பரையினரின் கைகளில்தான் இருக்கின்றன.
அந்த வகையில் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் சுருங்கி விட்ட பல தொழில்களில் ஒன்றுதான் சலவைத்தொழில். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குமுன், ஆங்கிலேயர் காலத்தில் சலவைத்துறைகள் அமைக்கப்பட்டன.
ஐந்தாறு தலைமுறைகளாக தொடர்ந்து சலவைத்தொழில் மட்டுமே வாழ்க்கை என்று அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, வாழ்ந்து வரும் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், எவ்வளவு தலைமுறைகளானாலும் தங்கள் வாழ்வில் பெரியளவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்கிறார்கள்.
தயக்கம் காட்டும் இளம்தலைமுறையினர்
வெயிலோ, மழையோ இரண்டுமே இவர்களுக்குத் தேவை. ஆனால், இரண்டும் எல்லை அளவை மீறினால் இவர்களது அன்றாட வாழ்க்கை திண்டாட்டமாகிவிடும். கடந்த காலங்களில் துணிகளுக்கு சாயம் போடுபவர்கள், வெளுப்பர்கள் அதிகளவில் இருந்தனர். ஆனால் தற்போதுள்ள இளம் தலைமுறையினர் பெரும்பாலானோர் தங்களது துணிகளை சலவைக்கு கொடுக்கவே தயக்கம் காட்டுகின்றனர். இதனால் தற்போதைய நிலையில் சலவை தொழில் தனது இறுதிக்கட்டத்தில் தள்ளாடி கொண்டிருக்கிறது.
இதனால் தற்போது சலவை தொழிலாளர்கள், சலவைக்கு துணிகள் இன்றி பிற தொழில்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சலவை தொழிலாளர்கள் தங்கள் தொழில் நலிவடைந்து வருவது பற்றி தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
மக்களே துவைத்து கொள்கின்றனர்
இதுகுறித்து சிதம்பரத்தை சேர்ந்த முத்து கூறுகையில், நான் 30 ஆண்டுகளாக சலவை தொழில் செய்து வருகிறேன். 3 தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோம். ஒரு துணியை சலவை செய்ய ரூ.15 முதல் ரூ.20 வரை வாங்கி வருகிறோம். அயனிங் செய்வதற்கு ஒரு துணிக்கு ரூ.10 வாங்குகிறோம். தற்போது வாஷிங்மெஷின் ஆதிக்கத்தால் எங்களது குல தொழில் அழிந்து விட்டது. மக்களே துணிகளை வீட்டில் துவைத்து கொள்ளுவதால், தற்போது இஸ்திரிக்கு தான் அதிகளவில் துணிகள் வருகிறது. அதனால் துணியில் கறையை நீக்கும் நாங்கள் வாழ்க்கையில் இன்னும் கரையேறாமல் உள்ளோம். எனவே எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாழ்வாதாரம் இழந்து தவிப்பு
தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் மாநில செயலாளர் மணிகண்டன் கூறுகையில், வாஷிங்மெஷினை நடுத்தர மக்கள் எப்போது வாங்க ஆரம்பித்தார்களோ, அப்போதே எங்களது தொழில் நலிவடையை தொடங்கிவிட்டது. அடுத்ததாக ஹைடெக் சலவை கடைகள் ஆங்காங்கே முளைக்க தொடங்கியதால், தற்போது எங்களுக்கு தொழிலே இல்லை. வீட்டிற்கு வீடு மின் இஸ்திரி பெட்டிகள் வந்ததால் எங்கள் குடும்பங்கள் தற்போது வருவாய் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சலவை கூடங்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றது. அவற்றை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சலவை தொழிலாளர்கள் பலர் குடியிருக்க வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்றார்.