முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுக்கு சிலை வைப்பதை நான் தடுத்தேனா?
முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுக்கு சிலை வைப்பதை நான் தடுத்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. பதில் அளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுக்கு சிலை வைப்பதை நான் தடுத்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. பதில் அளித்துள்ளார்.
வைத்திலிங்கம் பேட்டி
தஞ்சையில், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான் ஒரத்தநாடு தொகுதிக்கு எதையும் கேட்கவில்லை என்றும், யாருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை என்றும், ஒரத்தநாடு மக்களுக்கு தெரியாததுபோல பொய்யை பேசியுள்ளார்.
கல்லூரிகள் கொண்டு வந்தேன்
தமிழகத்தில் 2 கால்நடை மருத்துவக்கல்லூரிகள் தான் இருந்தது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கேட்டு ஒரத்தநாட்டிற்கு 3-வது கால்நடை மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்தேன். வேளாண்மை கல்லூரி, ஐ.டி.ஐ., பேராவூரணியில் கலைக்கல்லூரி, செங்கிப்பட்டியில் பொறியியல் கல்லூரி கொண்டு வந்தேன்.
தஞ்சை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை கொண்டு வந்தேன். அதன் மூலம் இன்றைக்கு தஞ்சை மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. அதேபோல வேலைவாய்ப்புகளில், ஆயிரம் பேருக்கு மேல் என்னால் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். நிறைய மாணவர்கள் பொறியியல், வேளாண், மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கு இடம் வாங்கிக்கொடுத்துள்ளேன்.
விரக்தியின் விளிம்பில்...
இதே எடப்பாடி பழனிசாமி 2021-ம் ஆண்டு தேர்தலில், வைத்திலிங்கம் திறமையானவர். இந்த தொகுதிக்கு நிறைய செய்தவர் என தேர்தல் பிரசாரத்தில் கூறினார். அன்றைக்கு நல்ல வாய் வைத்து பேசியவர். இன்றைக்கு நாற வாயை வைத்து என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல், விரக்தியின் விளிம்பில் நின்று, தான் முதல்-அமைச்சராக இருந்தோமே என்ற எண்ணம் கூட இல்லாமல், தான் வகித்த பதவிக்கு மரியாதை இல்லாத அளவிற்கு பேசி விட்டு சென்றுள்ளார்.
நான் எதையும் கேட்வில்லையாம். தஞ்சைக்கு சட்டக்கல்லூரி வேண்டும் என கேட்டேன். அப்போது, நீங்கள் தான் ஜெயலலிதாவிடம் எல்லாவற்றையும் கேட்டு பெற்று விட்டீர்கள். சட்டக்கல்லூரி அமைக்க ரூ.150 கோடிக்கு மேல் செலவாகும் என சொன்னவர் இந்த எடப்பாடி பழனிசாமி. இப்போது தவறான தகவலை பேசியுள்ளார்.
சண்டிக்குதிரை-பந்தயக்குதிரை
ஆயிரம் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என பேசியுள்ளார். துரோகி ஓ.பி.எஸ்.சும், துரோகி தினகரனும் இணைந்து விட்டார்கள் என கூறியுள்ளார். இதே எடப்பாடி பழனிசாமி தான் ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனை வேட்பாளராக நிறுத்தி அவரை போல் வல்லவர் இல்லை. அவரை போல் அரசியல் வித்தகர் இல்லை என கூறினார்.
இன்றைக்கு ஓ.பி.எஸ்., தினகரன் இருவரும் சந்தித்து விட்டதால், தனக்கு அரசியலில் வாழ்வு கிடையாது என்பதால் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசியுள்ளார். சண்டிக்குதிரை எதற்கும் பயன்படாது என நான் கூறினேன். அந்த கூட்டத்தில் காமராஜ் பேசியபோது, இ.பி.எஸ்.சை சண்டிக்குதிரை இல்லை, பந்தயக்குதிரை என கூறியுள்ளார். 8 தேர்தலில் தோல்வியை சந்தித்தவரை பந்தயக்குதிரை என காமராஜ் சொல்லலாமா?.
நான் தடுத்தேனா?
முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுக்கு சிலை திறப்பதை நான் தடுத்தேன் என கூறியுள்ளார். அவர் பொய் சொல்கிறார். அவர் கூறிய ரகசியத்தை வெளியில் சொன்னால் அசிங்கமாகி விடும்.
எடப்பாடி பழனிசாமி எத்தனை முறை ரகசியமாக சபரீசனுக்கு போன் செய்துள்ளார் என்பது அவரின் மனச்சாட்சிக்கு தெரியும். நாங்கள் உங்களை விட அனைத்திலும் தகுதியானவர்கள். எந்த நேரத்தில் நிரூபிக்க முடியுமோ அப்போது நிரூபிப்போம்.
நீதிமன்ற தீர்ப்பு வரட்டும். இரட்டை இலை சின்னம் இல்லாமல், எடப்பாடி பழனிசாமி தேர்தலை சந்தித்து, ஒரு ஓட்டு அதிகமாக எங்களை விட வாங்கி விட்டால், நாங்கள் அரசியல் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.