குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துவது எப்படி?

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை கட்டுப்படுவத்துவது எப்படி? என கலெக்டர் உமா விளக்கம் அளித்தார்.;

Update: 2023-06-13 18:45 GMT

1 லட்சம் குழந்தைகள் சாவு

நாமக்கல் தாலுகா பொரசபாளையம் கிராமத்திற்கு உட்பட்ட அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் இருவார கால முகாமினை கலெக்டர் உமா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுமார் ஒரு லட்சம் பேர் வயிற்றுப்போக்கு நோயால் உயிரிழக்கின்றனர். அதில் ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகளும், 2 வயதிற்கு கீழ்பட்ட குழந்தைகளும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வயிற்றுப்போக்கு நோய் சுலபமாக தடுக்கப்பட கூடியதும் குணப்படுத்தக்கூடியதாகும்.

ஓ.ஆர்.எஸ். கரைசல்

சுத்தமான குடிநீர், சுற்றுப்புற சுகாதாரம், குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது மற்றும் 2 வயது வரை இணை உணவுடன் தாய்ப்பால் கொடுப்பது, சரியான ஊட்டச்சத்து கொடுப்பது, கைகளை முறையாக சோப்பு கொண்டு கழுவுவது போன்றவற்றின் மூலம் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கலாம் என்பதை அனைத்து தாய்மார்களும் தெரிந்துகொண்டு அவற்றை கடைபிடிக்க வேண்டும்.

சாப்பிடும் முன்பும், கழிப்பறை சென்று வந்த பின்பும், சோப்பு போட்டு கை கழுவும் முறையை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் திறந்த வெளியில் அசுத்தம் செய்வதை தவிர்த்து கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். வயிற்றுப்போக்கு கண்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் 14 நாட்களுக்கு வழங்குவதன் மூலம் நீர்ச்சத்து குறைவதை தடுப்பதுடன் உயிரிழப்புகளை சுலபமாக தவிர்க்கலாம். இது அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிதல் மற்றும் கண்டறியப்பட்ட குழந்தைகளை மருத்துவரிடம் பரிந்துரை செய்து அனுப்புதல் போன்ற பணிகளை அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த இரு வார வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் தீவிர முகாம்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை, சமூக நலம், சத்துணவு திட்டத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறைகளை சார்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் குழந்தைகள் பிரிவு ஆகிய இடங்களில் போதுமான அளவு ஓ.ஆர்.எஸ். பொட்டலங்கள் மற்றும் துத்தநாக மாத்திரைகள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

செயல் விளக்கம்

பின்னர், மாணிக்கம்பாளையம் துணை செவிலியர் பயிற்று பள்ளி மாணவிகள் மூலம் கை கழுவும் முறை மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் குறித்த செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பூங்கொடி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொறுப்பு) கீதா, எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்