டயாலிசிஸ் சிகிச்சை பெற்ற ஆசிரியை திடீர் சாவு
நெல்லையில் தனியார் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்ற ஆசிரியை திடீரென்று இறந்தார். அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் தனியார் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்ற ஆசிரியை திடீரென்று இறந்தார். அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிரியை சாவு
தூத்துக்குடி மாதாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் புத்தக கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பத்மபிரியா (வயது 32). தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டு, நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக பத்மபிரியா திடீரென்று இறந்து விட்டார்.
ஆஸ்பத்திரி முற்றுகை
இதுபற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பத்மபிரியா உடலை வாங்க மாட்டோம் என்று கூறி கதறி அழுதனர்.
இதை அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேசுவரன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பத்மபிரியாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குற்றச்சாட்டு
அப்போது அவர்கள், "டயாலிசிஸ் சிகிச்சைக்கு முன்பு வரை பத்மபிரியா, குடும்பத்தாரிடம் நன்றாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால் டயாலிசிஸ் சிகிச்சை சரியாக அளிக்கப்படாமல், டாக்டர் மற்றும் ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால் தான் அவர் இறந்து விட்டார்" என்று குற்றம்சாட்டினர்.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகள், ஆஸ்பத்திரிக்குள் சென்று டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.