விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு நேற்று காலை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் முத்துவேல், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இவர்கள் அனைவரும், 2 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டத்தை மாவட்ட கலெக்டர் நடத்த வேண்டும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து அதன் கூட்டத்தை 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டும் வாரந்தோறும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும்,
கண்டமங்கலம் ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை வழங்கப்படாததை கண்டித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாததால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் பற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்ததன்பேரில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.