பழங்குடியின மக்கள் தர்ணா போராட்டம்
அரசு பட்டா வழங்கிய இடத்தில் வீடுகட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள், சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பட்டா வழங்கிய இடத்தில் வீடுகட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள், சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடுகட்ட எதிர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, பெரணமல்லூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள கெங்காவரம், தத்தனூர், அப்பேடு, நாச்சாவரம், ஈசத்தாங்கல் ஆகிய ஊர்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் 75 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
இதில் கெங்காவரத்தில் 50 நபர்களுக்கு வீடு கட்டுவதற்கு 2 சென்ட் வீதம் வீட்டு மனை ஒதுக்கப்பட்டு அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன் மற்றும் நில அளவையர் சென்று தலா 2 சென்ட் வீதம் அளந்து கல் நட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் இந்த இடத்தில் பழங்குடியினர்கள் வீடு கட்டக்கூடாது என கூறி தடுத்து நிறுத்தினர்.
தர்ணா போராட்டம்
இதனால் ஆத்திரம் அடைந்த பழங்குடியின மக்கள் 75-க்கும் மேற்பட்டோர் சேத்துப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் கோவிந்தராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கெங்காவரம் கிராமத்தை சேர்ந்த சிலர் பழங்குடியினருக்கு வீடுகட்ட எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் கோவிந்தராஜிடம் மனு கொடுத்தனர்.
அவர்களிடம் பேசிய தாசில்தார், பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி, அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் தகராறு செய்தால் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து பழங்குடியின மக்களிடம் பேசிய தாசில்தார், உங்களுக்கு அந்த இடத்தில் வீடு கட்டி தரப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.