மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தர்ணா
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பெரம்பலூரில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கிளை சார்பில் தர்ணா போராட்டம், துறைமங்கலம் நான்குரோடு அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. மின் வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு திரும்பப்பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்காமல் பொதுத்துறைகளாகவே நீடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத்தலைவர் பஷீர், மாவட்ட செயலாளர் ராஜகுமாரன் உள்பட பலர் பேசினார்கள்.