மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி 90 வயது முதியவர் தர்ணா
வடமதுரை அருகே தன்னை கொலை செய்ய சிலர் வருவதாக கூறி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி 90 வயது முதியவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
90 வயது முதியவர்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூர் முடக்குப்பட்டியை சேர்ந்தவர் கருப்பன் (வயது 90). இவருக்கு புக்காயி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது வீட்டின் அருகே 60 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. தொட்டிக்கு மேலே ஏறி செல்ல இரும்பு ஏணி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று கருப்பன் திடீரென ஏணி வழியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறினார். இதனைக்கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்த வாலிபர்கள் சிலர், தொட்டியின் மேல் ஏறி அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கருப்பன் கீழே இறங்கி வர மறுத்து விட்டார். அதேநேரத்தில், கீழே விழுந்து விடாத வகையில் கருப்பனை அவர்கள் பாதுகாப்பாக பிடித்து கொண்டனர்.
வலை கட்டி மீட்பு
தன்னை சிலர் கொலை செய்ய வருவதாகவும், போலீசார் வந்தால் மட்டுமே கீழே இறங்கி வருவேன் என்றும் கூறி கருப்பன் தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து வடமதுரை போலீசார் மற்றும் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் தொட்டியின் மீது ஏறினர். ஒரு வலையில் கருப்பனை அமர வைத்து கயிறு கட்டி அவரை பத்திரமாக கீழே இறக்கினர். பின்னர் அவரை, ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 90 வயது முதியவர் ஒருவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
--------