ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-20 20:21 GMT

ஈரோடு

ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

ஈரோடு காளை மாட்டு சிலை அருகில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் பாஸ்கர்பாபு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கிடு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

அரசு பள்ளிக்கூட குழந்தைகளுக்கு மதிய சத்துணவு, சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்கப்படுகிறது. தற்போது காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு அறிவித்து அதனை, மகளிர் குழு, மக்கள் நல பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்க திட்டமிட்டு உள்ளது. இதனை செயல்படுத்தக்கூடாது. சத்துணவு திட்டம் போல், காலை சிற்றுண்டியையும் சத்துணவு ஊழியர்கள் மூலமே வழங்க வேண்டும்.

காலிப்பணியிடம்

காலை சிற்றுண்டியை ஒரு அமைப்பினர் வழங்கிவிட்டு, மதியம் சத்துணவு சாப்பிட்ட நிலையில் குழந்தைகளுக்கு சிரமங்கள் ஏற்பட்டாலும், அது சத்துணவு பணியாளர்களையே பாதிக்கும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 என உயர்த்த வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பணிக்கொடையாக சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சசிகலா மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்