தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே மாவட்டத்தில் வெயில் அளவு அதிகரித்தது. 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. இதனால் பகல் நேரத்தில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது. இந்த நிலையில் கோடை வெயிலால் ஏற்படும் உஷ்ணத்தை குறைக்க நுங்கு, இளநீர் ஆகியவற்றை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக தர்மபுரி நகர பகுதியில் நுங்கு விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஏரியூர், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நுங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தர்மபுரி நெசவாளர் காலனி, செந்தில் நகர், ஒட்டப்பட்டி, பாரதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதால் நுங்கு வரத்து வழக்கத்தை விட குறைந்துள்ளது. அதே நேரத்தில் நுங்குக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால் நுங்கு விலை அதிகரித்துள்ளது. ரூ.20-க்கு 3 நுங்குகள் விற்பனை செய்யப்படுகிறது.