தர்மபுரி மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில்விவசாயிகளுக்கு 3,348 புதிய மின் இணைப்புகள்கலெக்டர் தகவல்

Update: 2022-12-31 18:45 GMT

தர்மபுரி மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் இதுவரை விவசாயிகளுக்கு 3,348 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதிய மின் இணைப்புகள்

தமிழகத்தில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் விவசாயிகளுக்கு 2022-2023-ம் ஆண்டு 5,374 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை விவசாயிகளுக்கு 3,348 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாய மின் இணைப்பு திட்டங்களை பொறுத்தவரை சாதாரண பிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. சுயநிதி பிரிவில் மின் இணைப்பு பெற ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என 3 வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

பெயர் மாற்றம்

சுயநிதி பிரிவில் கட்டணம் செலுத்தி பதிவு செய்த பின்னரும் மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்குவதற்காக 2018-ம் ஆண்டில் தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 5 குதிரை திறன் உள்ள மின்மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், 7.50 குதிரை திறனுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம், 10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரை திறனுக்கு ரூ.4 லட்சம் ஆகிய வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

தர்மபுரி மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த தர்மபுரி மின் பகிர்மான வட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, அரூர், கடத்தூர் ஆகிய கோட்டங்களுக்குட்பட்ட விவசாய விண்ணப்பதாரர்களுக்கு மின்வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பெயர் மற்றும் சர்வே எண் உட்பிரிவு மாற்றம் சர்வே எண், கிணறு மாற்றம் ஆகியவற்றை செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்