தர்மபுரியில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தர்மபுரியில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தர்மபுரி அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று பாப்பாரப்பட்டி சிவா காலனியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் மதன்ராஜ் என்பவர் கொடுத்த கோரிக்கை மனுவில், எனது 2-வது மகன் வெங்கடேசன் (வயது 24) அவருடைய மனைவி சத்யபிரியா ஆகியோர் ஆகஸ்டு 13-ந் தேதி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர்.
அப்போது பசுமை நகர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் வெங்கடேசன் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்த விபத்துக்கு காரணமான பஸ்சை போலீஸ் நிலையத்திற்கோ அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வுக்கோ போக்குவரத்து அதிகாரிகள் உட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்ட டிரைவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வெங்கடேசன் இறப்பிற்கு காரணமான பஸ்சை டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.