தர்மகுளம் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் வேண்டும்

தர்மகுளம் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதிக்கு, பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Update: 2023-07-25 18:45 GMT

திருவெண்காடு:

தர்மகுளம் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதிக்கு, பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கல்வி வளர்ச்சிக்காக...

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள், கழிவறை வசதி, விளையாட்டு மைதானம், ஆய்வக வசதி உள்ளிட்டவைகளுக்கு முன்னாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் பெயரில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்-அமைச்சருக்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். இதனிடையே இந்த திட்டத்தின் கீழ் ஒரு சில பள்ளிகள் இடம் பெறாமல் இருப்பது அந்தந்த பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. பூம்புகார் அருகே தர்மகுளம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது.

6 காலிப்பணியிடங்கள்

இந்த பள்ளியில் 6 முதல் 10 வகுப்பு வரை உள்ளது. இங்கு 556 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலேயே உயர்நிலைப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயில்வது குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கு 15 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது.

இந்த வகுப்பறைகள் மாணவர்கள் கல்வி பயில போதுமானதாக இல்லை. அதன் காரணமாக அறிவியல் ஆய்வகத்தில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். மேலும் இந்த பள்ளியில் தற்போது 14 ஆசிரியர்-ஆசிரியைகள் உள்ளனர். கிட்டத்தட்ட 6 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

போதிய வகுப்பறைகள் இல்லை

இது குறித்து பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிக அளவில் கல்வி பயின்று வருகின்றனர். அதிக மாணவர்கள் கல்வி பயிலும் இந்த பள்ளிக்கு அரசின் சலுகைகள் கிடைக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது.

மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக, வகுப்பறைகள் உபயோகப்படுத்தப்படாமல் உள்ளது. ஆனால் இந்தப் பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில போதிய வகுப்பறைகள் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. எனவே இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்