பட்டாவில் பெயர் மாற்றி தரக்கோரி பெண் 'திடீர்' தர்ணா

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தந்தை பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றி தரக்கோரி பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-01-09 17:31 GMT

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் அளித்தனர்.

குறைதீர்வு கூட்டத்தில், காட்பாடி தாலுகா பெரியபட்டரை பகுதியை சேர்ந்த விஜயா மற்றும் அவருடைய கணவர் ஏழுமலை ஆகியோர் மனு அளிக்க வந்தனர். அவர்கள் திடீரென குறைதீர்வு கூட்டரங்கின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவர்களிடம் சென்று விசாரித்தனர்.

தர்ணாவில் ஈடுபட்ட பெண்

அப்போது விஜயா கூறுகையில், எனது தந்தை ராஜ் அணைக்கட்டு தாலுகா இலவம்பாடி கிராமத்தில் வசித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் அவர் பெயரில் இருந்த 66 சென்ட் நிலத்தை எனது பெயருக்கு எழுதி கொடுத்தார். அதேபோன்று தந்தை எனது அண்ணன் மற்றும் தங்கைக்கும் நிலம் வழங்கினார். அந்த நிலத்தின் பட்டாவை எனது பெயருக்கு மாற்றி தரக்கோரி அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் உள்ள தலைமை சர்வேயர் அலுவலர் அலுவலகம், குறைதீர்வு கூட்டம் உள்பட பல்வேறு இடங்களில் பலமுறை மனு அளித்தேன். சுமார் 1½ ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பட்டாவை எனது பெயருக்கு மாற்றித்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். ஆனால் எனது அண்ணன், தங்கையும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து விட்டனர். அதனால் விரக்தி அடைந்து குறைதீர்வு கூட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்டதாக கூறினார்.

அதற்கு போலீசார், இதுபோன்ற காரணங்களுக்காக இங்கு தர்ணாவில் ஈடுபட கூடாது. உங்களின் குறைகளை கலெக்டரிடம் தெரிவித்து அதனை மனுவாக கொடுங்கள் என்றனர். பின்னர் விஜயாவை, கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் மனு அளிப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர். விஜயாவிடம் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், பட்டாவில் பெயர் மாற்றி தர உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்