பழனி-மூணாறு இடையே மீண்டும் பஸ் இயக்கப்படுமா?; பக்தர்கள் எதிர்பார்ப்பு

ஆன்மிகம், சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் பழனி-மூணாறு இடையே மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-20 21:30 GMT

ஆன்மிகம், சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் பழனி-மூணாறு இடையே மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூணாறுக்கு பஸ் சேவை

உலக புகழ்பெற்ற ஆன்மிக தலமாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகின்றனர். இதில் குழுவோடு வரும் பக்தர்களை தவிர்த்து பெரும்பாலானோர் பஸ், ரெயில் மூலமே பழனிக்கு வருகை தருகின்றனர்.

குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் பழனிக்கு வருகின்றனர். பழனி முருக பக்தர்கள் வசதிக்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேவேளையில் வெளிமாநிலத்தில் இருந்து வரும் முருக பக்தர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் அங்குள்ள பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து பழனிக்கு நேரடி பஸ் சேவை இல்லை. இதனால் தமிழக, கேரள பக்தர்கள் அவதி அடைகின்றனர்.

மீண்டும் இயக்க வேண்டும்

மூணாறு, மறையூர், காந்தலூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு அதிகமாக வந்து செல்கின்றனர். இதையொட்டி பழனியில் உடுமலை, மறையூர் வழியாக மூணாறுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ் சேவை தொடங்கப்பட்டது. ஆன்மிகம், சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் இந்த பஸ் சேவை இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி-மூணாறு பஸ் சேவை திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் மூணாறு பகுதி பக்தர்கள், பொதுமக்கள் உடுமலை வந்து அங்கிருந்து வேறு பஸ் மாறி பழனிக்கு வருகின்றனர். இதன்காரணமாக அலைச்சல் ஏற்பட்டு பக்தர்கள் தவிக்கின்றனர். எனவே பழனி-மூணாறு இடையே நேரடி பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, "கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறு பகுதிகளில் தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ காலங்களில் பழனிக்கு வருகின்றனர். ஆனால் மூணாறு-பழனி இடையே நேரடி பஸ் சேவை இல்லாததால் வயதானவர்கள், குழந்தைகளுடன் வருவோர்கள் தவிப்புக்கு ஆளாகின்றனர். அதேபோல் பழனி பகுதி மக்களும் சுற்றுலாவுக்கு, மூணாறு செல்ல வேண்டும் என்றால் உடுமலை சென்று மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பக்தர்கள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பழனி-மூணாறு இடையே மீண்டும் பஸ் இயக்க வேண்டும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்