பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

வாரவிடுமுறை, கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-26 20:30 GMT

வாரவிடுமுறை, கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை உற்சவம்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மாசி மாத கார்த்திகை உற்சவ நாளாகும். இதையொட்டி பழனி முருகன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜையில் சுவாமிக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணி சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீக அலங்காரம் நடந்தது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை, தங்கரத புறப்பாடு நடைபெற்றது. அப்போது 200 பேர் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்கரதத்தை இழுத்து வழிபாடு செய்தனர்.

அலைமோதிய பக்தர்கள்

பழனி முருகன் கோவிலை பொறுத்தவரை வாரவிடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம்.

அந்தவகையில் நேற்று வார விடுமுறை மற்றும் மாசி மாத கார்த்திகை உற்சவம் என்பதால், பழனி முருகனை தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக அடிவாரம், கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் அதிக அளவில் வந்ததால், பல்வேறு இடங்களில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதனை தடுக்க பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து சீரான வரிசையில் அனுப்பப்பட்டனர். படிப்பாதை தவிர்த்து இதர வழிகளான ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்திலும் கூட்டம் காரணமாக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

4 மணி நேரம் காத்திருப்பு

இதேபோல் மலைக்கோவிலில் பொது மற்றும் கட்டண தரிசன வழிகளில் பக்தர்கள் காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்து, முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பழனியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் அவதியடைந்தனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த தைப்பூச திருவிழாவையொட்டி பழனி வடக்கு கிரிவீதி, சன்னதி வீதியில் பக்தர்கள் வசதிக்காக நிழற்பந்தல் அமைக்கப்பட்டது. தற்போது அவை பிரிக்கப்படாமல் உள்ளன. இதனால் பழனிக்கு வரும் பக்தர்கள் அந்த நிழற்பந்தலில் இளைப்பாறி நிம்மதி அடைகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்