பழனி முருகன் கோவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்; 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

ஆங்கில புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-01 16:55 GMT

ஆங்கில புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் படையெடுத்தனர்

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும்.

இந்தநிலையில் ஆங்கில புத்தாண்டான நேற்று பழனி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே அடிவாரம், மலைக்கோவிலில் பக்தர்கள் திரண்டனர். தொடர் விடுமுறை விடப்பட்டு இன்று (திங்கட்கிழமை) பள்ளி திறக்க உள்ள நிலையில் ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் பழனிக்கு வந்திருந்தனர்.

அலகு குத்தி கிரிவலம்

அதேபோல் பழனி முருகன் கோவிலில் வருகிற 29-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தற்போதே பாதயாத்திரை பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி நேற்று திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து வழிபாடு செய்தனர்.

குறிப்பாக மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் பழனி அடிவார பகுதியில் கிரிவலம் வந்தனர். அவர்கள் சுமார் 4 அடி முதல் 8 அடி நீள அலகுகளை குத்தி வந்திருந்தனர். பின்னர் நேர்த்திக்கடன் செலுத்தி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.

காத்திருந்து தரிசனம்

பக்தர்கள் குவிந்ததால் பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. மேலும் மலைக்கோவிலின் வெளிப்பிரகாரம் மற்றும் பொது, சிறப்பு, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருப்புக்கு பின்னரே முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதேபோல் பழனி முருகன் கோவிலின் உபகோவில்களான திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோவிலிலும் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். மலைக்கோவிலில் உள்ள ஆனந்தவிநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

போக்குவரத்து நெரிசல்

புத்தாண்டையொட்டி பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வெளியூர்களில் இருந்து கார், வேன், பஸ்களில் பக்தர்கள் வந்தனர். இதனால் அடிவாரம், குளத்துரோடு, கிரிவீதிகள், சன்னதிவீதி, பூங்காரோடு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவ்வப்போது போக்குவரத்தை சீரமைத்தனர். அதேபோல் பஸ், ரெயில்களில் வந்த பக்தர்கள் பழனியில் தரிசனம் முடித்த பின்பு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்நிலையத்தில் குவிந்தனர். இதனால் அங்கும் கடும் நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக ஈரோடு, மதுரை, திருப்பூர் வழித்தட பஸ்களில் இருக்கையை பிடிக்க பயணிகளிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ராஜகோபுரத்துக்கு படிகள்

பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. மேலும் கும்பாபிஷேகம் நடைபெறும் ராஜகோபுரத்துக்கு செல்ல படிகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்