பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-08-26 21:30 GMT

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோவில் மூலவரான சந்திரசேகர், ஆனந்தவல்லி அம்மனுடன் சப்பரத்தில் எழுந்தருளி பழனி ஆவணி மூல வீதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றார். அங்கு சந்திரசேகர்-ஆனந்தவல்லி அம்மன், விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் வையாபுரிக்குளக்கரையில் வைத்து பழனி முருகன் கோவில் ஓதுவார், திருவிளையாடல் புராண பாடல்களை பாடி சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியை நடத்தினார். அதைத்தொடர்ந்து சந்திரசேகர்-ஆனந்தவல்லி அம்மன் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்