அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
அய்யலூர் காளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அய்யலூரில் உள்ள சக்தி விநாயகர், மகா காளியம்மன், மகா முத்துமாரியம்மன் கோவில் உற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அம்மன்களின் கரகம் பாலித்து மின்தேரில் ஊர்வலமாக வந்தனர். அதைத்தொடர்ந்து வாண வேடிக்கைகளும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று காலை பக்தர்கள் மாவிளக்கு மற்றும் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அதன்பின்னர் பொங்கல் வைத்து, கிடா வெட்டினர். அதனைத்தொடர்ந்து மாலை பக்தர்கள் கருப்பணசாமி வேடமிட்டு பாரி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) முளைப்பாரி ஊர்வலத்துடன், அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.