கோவில்களில் தமிழ் வழிபாட்டு முறைக்கு பக்தர்கள் வரவேற்பு - இந்து சமய அறநிலையத்துறை
கோவில்களில் தமிழ் வழிபாட்டு முறையை பக்தர்கள் வரவேற்கின்றனர் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு 5-ந்தேதி தமிழில் வழிபாடு என்ற பெயர் பலகையை வெளியிட்டார். அதனை தொடர்ந்து, 47 முதுநிலை கோவில்களிலும் தமிழில் வழிபாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தமிழில் வழிபாடு என்ற பெயர் பலகையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பக்தர்களின் பார்வைக்கு திறந்து வைத்தார்.
தமிழில் வழிபாடு செய்ய ஏதுவாகச் சிவன், அம்மன், விநாயகர், முருகன், பெருமாள் உள்ளிட்ட 12 இறைவன் போற்றி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழில் வழிபாடு செய்ய பதிவு செய்து வருகிறார்கள். தமிழில் வழிபாடு திட்டம் சீரிய முறையில் நடைபெற ஒவ்வொரு கோவில்களிலும் கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் கோவில்களில் தமிழில் வழிபாடு சிறப்பாக நடைபெறுவதால் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் மனம் மகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது