தைப்பூசம், பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் தைப்பூசம் மற்றும் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.;
திருவண்ணாமலையில் தைப்பூசம் மற்றும் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பவுர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலையில் மலையை சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு 10.41 மணி அளவில் தொடங்கி நேற்று இரவு 12.48 மணி அளவில் நிறைவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று அதிகாலையிலும் பனி பொழிவையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றனர்.
நேற்று இரவு வரை பவுர்ணமி நீடித்ததாலும், தைப்பூசம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் நேற்றும் ஏராளமானோர் கிரிவலம் சென்றனர். மதிய வெயிலிலும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
5 மணி நேரம்...
கிரிவலப்பாதையில் ஆங்காங்கே காவல் துறை சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கோவிலுக்குள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்று பகலில் சாமி தரிசனம் செய்வதற்காக நின்ற பக்தர்களின் வரிசை ராஜகோபுரம் எதிரில் உள்ள பெரிய தேர் வரை நீண்டு காணப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேல் ஆனதாக கூறப்படுகிறது.
மேலும் ராஜகோபுரத்தின் முன்பு பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி ராஜகோபுரத்தின் முன்பு கிரிவலம் சென்ற பக்தர்கள் சுமார் 500 பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
பந்தல் வழியாகவும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்லும் வகையில் வழி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மதியம் வெயில் சமயத்தில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. பின்னர் மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.